Saturday, March 7, 2009

கலைஞர் அரசு ஒரு குறை பிரசவம்!

நாஞ்சில் சம்பத். இவரைத்தான் தமிழக காவல்துறை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிவிட்டதற்காக உடனடியாக அவரைக் கைது செய்து இறையாண்மையை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இந்தச் செய்திகளைப் படித்தபோது 2006 மே மாதத்தில் கல்கி இதழுக்காக நாஞ்சில் சம்பத்திடம் பேட்டியெடுத்தது நினைவுக்கு வந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தி.மு.க கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதற்கு தமது கனல் சுரக்கும் வார்த்தைகளால் அச்சாரம் போட்டவர் ம.தி.மு.கவின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ம.தி.மு.க எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளது என்பது குறித்து அவரிடம் பேசியிருந்தேன். அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள் இங்கே:

திமுக கூட்டணியின் வெற்றி குறித்து?

மிகப்பெரிய கூட்டணியை எதிர்த்து, மிருகபலம் கொண்ட சன் டிவியை எதிர்த்து, நிராயுதபாணியாக களத்தில் நின்று நாங்கள் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்றைக்கு தி.மு.க கூட்டணியினர் “தப்பித்தோம்.. பிழைத்தோம்” என்ற நிலைமையில்தான் தட்டுத்தடுமாறி ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆகவே இதை தோல்வி என்றே நாங்கள் கருதவில்லை. கூட்டணி உருவானபோது இருந்த அதே மனநிலையில்தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். அதிமுகவுடனான இந்தக்கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் உளமார நினைக்கிறோம்.

வைகோவின் பிரச்சாரம் அதிமுக தலைமை எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை என்ற ஒரு கருத்து இருக்கிறதே..?

தேர்தல் களத்தில் வைகோவுக்கு ஈடுகொடுத்துப் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு எதிர்முகாமில் ஆள் இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தமிழக சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்கட்சியாக அ.தி.மு.க வந்துள்ளதற்கு வைகோவின் பிரச்சாரம் முக்கியமான காரணம் என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ஆகவே வைகோவின் பிரச்சாரம் எடுபடவில்லை என்பது கண்மூடித்தனமான கற்பனைக் குற்றச்சாட்டு.

தி.மு.க கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றிய பிறகு, கூட்டணி விஷயத்தில் தவறு செய்து விட்டோமே என்று வருத்தப்பட்டீர்களா?

ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்திருந்தால் எங்களை அரவணைப்பது போல அழித்து இருப்பார்கள். திட்டமிட்டுத் தோற்கடித்திருப்பார்கள். ஆகவே, இதுபோன்ற எண்ணம் எங்கள் யாருக்குமே வரவில்லை.

பாஜக, தே.மு.தி.க போன்ற கட்சிகள் கூட தனித்து நின்றுதான் தங்கள் முதல் பிரதிநிதியை சட்டமன்றத்துக்கு அனுப்பின. ஆனால் ம.தி.மு.கவுக்கு எம்.பிக்களும் சரி. எம்.எல்.ஏக்களும் சரி. அதி.முக தயவுடன் தான் கிடைத்த்துள்ளது. இது உங்களுக்கு பலவீனமான விஷயம் இல்லையா?

இன்றைய அரசியல் சூழலில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று மிகப்பெரிய வெற்றிகளை எல்லாம் பெறவே முடியாது. அ.தி.மு.கவுடன் இணைந்து சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கு ம.தி.முக. பிரதிநிதிகளை அனுப்பியதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். அதேசமயம் இப்போது எங்கள் இலக்கு இப்போது உள்ள ஆறை நூறாக்குவதுதானே தவிர வேறு எதுவும் இல்லை.

விஜயகாந்த் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் ம.தி.மு.க, பாமக போன்ற கட்சிகளின் கனவுகளைத் தகர்த்துவிட்டதாகச் சொல்லலாமா?

எங்களுடைய இயக்கம் கொள்கை சார்ந்தது. லட்சியம் சார்ந்த இளைஞர்களின் பாசறை. ஆனால் விஜயகாந்துக்கு விழுந்த வாக்குகள் சினிமாத்தனமான வாக்குகள். தமிழகத்தில் சினிமா கவர்ச்சிக்கு மயங்குவதற்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அது இந்தமுறை விஜயகாந்துக்கு சென்றுள்ளது. ஆகவே எங்கள் இயக்கத்தை இதுபோன்ற சினிமாத்தனமான இயக்கத்துடன் ஒப்பிடுவதில் எங்களுக்கு உடன்பாடே இல்லை. எங்களைப் பொறுத்தவரை தளி தொகுதியில் சுயேட்சை ஜெயித்தது போலவே விஜயகாந்த விருதாசலத்தில் ஜெயித்துள்ளார். அவ்வளவுதான்.

தி.மு.க ஆட்சியைக் கவிழ்க்க உங்கள் கூட்டணி சதி செய்வதாக கலைஞர் குற்றம்சாட்டுகிறாரே..?

கலைஞர் ஆட்சி ஒரு குறை பிரசவம். ஒவ்வொரு நாளும் அச்சத்தோடும் பீதியோடும் ஆட்சியை நடத்த வேண்டி இருப்பதால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே இந்த ஆட்சிக்கு ஆயுள் குறைவுதான். ஆட்சி நிர்வாகத்தின் ஆணிவேர் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய உள்ளாட்சித்துறையை ஸ்டாலினிடம் கொடுத்து, ஆயிரம் பிறை கண்ட தலைவர்களையெல்லாம் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்துக்கு தள்ளியிருப்பது திமுகவுள்ளேயே புகைச்சலைக் கிளம்பியுள்ளது. ஆனாலும் அதை மறைக்க, அமைச்சரவையில் மேலும் நான்கு வாரிசுகளுக்கு இடமளித்து தனது செயலை நியாயப்படுத்த காய்நகர்த்தி இருக்கிறார் கலைஞர். ஆகவே சதி செய்துதான் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே கவிழும்.


Thanks : http://india360degree.blogspot.com/2009/03/blog-post_07.html

No comments:

Post a Comment